

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்லத் தடை விதித்தும், இந்த நாடுகளில் இருந்து விமானச் சேவைக்கு தடை விதித்தும் ஐக்கிய அரபு அமீரகம் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு வரும் 21-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மற்றும் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக 14 நாடுகளில் இருந்து விமானச் சேவைத் தடை செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே இந்த முன்னெச்சரி்க்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, லைபிரியா, சியாரா லியோன், காங்கோ குடியரசு, உகாண்டா, ஜமிபியா, வியட்நாம், இந்தியா, வங்கதேசம், இலங்கை,நேபாளம், நைஜிரியா, தென் ஆப்பிரிக்க ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரக மக்கள் பயணிக்கக்கூடாது. இந்த 14 நாடுகளில் இருந்து விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கும் வரும் 21ம் தேதி நள்ளிரவுவரைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சரக்கு விமானப் போக்குவத்து, வர்த்தகரீதியான தனிப்பட்ட நபர்கள் பயணிக்கும் சிறிய விமானங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மக்கள் வெளிநாடு சென்றுதிரும்பும் போது கரோனா தொற்று ஏற்பட்டால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த நாட்டுக்குச் செல்கிறார்களோ அந்த நாட்டு அரசு கூறிய அனைத்து வழிகாட்டல்களையும், கரோனாதடுப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், கரோனாவில் பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரக மக்கள், உரிய அனுமதி பெற்று, மீண்டும் சொந்த நாட்டுக்குவந்து சிகிச்சை பெறலாம்
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.