

இந்தோனேசியாவில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளதைத் தொடர்ந்து அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இது குறித்து இந்தோனேசிய பிரதமர் ஜோகோ கூறும்போது, அடுத்த இரு வாரங்களுக்கு கரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த இருக்கிறோம். சூழல் நம்மை இந்த நடவடிக்கைக்கு தள்ளியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட உள்ளது” என்றார்.
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக 20,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்த்தா, ஜாவா பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
மால்கள், மசூதிகளில் மக்கள் செல்வதற்கு அடுத்த இருவாரங்களுக்கு தடைவிதிக்கப்படும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் இதுவரை 8% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.