

கரோனாவை முழுமையாக விரட்டும் அமெரிக்காவின் முயற்சிக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கரோனா வைரஸ் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில் கூறியதாவது
“ இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் அதிக தொற்று தன்மை கொண்டதாக உள்ளது.
அமெரிக்காவில் பரவும் கரோனா வைரஸில் கடந்த வாரத்தில் 20% பேருக்கு டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் இந்த சதவீதம் 10% ஆக இருந்தது. பிரிட்டனிலும்இதே நிலைதான்.
, கரோனாவை விரட்ட நினைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது. இதில் நல்ல செய்தி என்னவென்றால் அமெரிக்காவின் தடுப்பூசிகள் டெல்டா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன. நம்மிடம் கருவி உள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி இந்த தொற்றை அழிக்க வேண்டும்” இவ்வாறு அந்தோனி ஃபாஸி தெரிவித்தார் .
உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ளபோதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.