

கம்போடியாவில் கிணற்றில் விழுந்த 45 ரூபாயை எடுக்கச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான். அவனை காப்பாற்றச் சென்ற 6 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சோக சம்பவம் கம்போடியாவின் சீம் ரீப் மாகாணம், பான்டீ ஸ்ரே மாவட்டத்தில் உள்ள ரோம்செக் பகுதியில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்தது. அப்பகுதியைச் சேர்ந்த டய் சின் (50) என்பவர், அன்று காலையில் தண்ணீர் எடுக்கும்போது, அவர் வைத்திருந்த 3,000 கம்போடிய ரியலும் (சுமார் ரூ. 45), சிகரெட் லைட்டரும் 16 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் விழுந்தது. மூங்கில் கம்பால் ஆன ஏணியை கிணற்றின் மேல் பகுதியிலிருந்து கீழ்நோக்கித் தொங்கவிட்டு, அதில் இறங்கி பணத்தை எடுக்க முயன்றார். அதை எடுக்க முடியாமல், ஏணியை அப்படியே விட்டுவிட்டுச் சென்றார்.
வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது 11 வயது மகன், அன்று மாலை கிணற்றில் இருந்த மூங்கில் ஏணி வழியாக இறங்க முயற்சித்தான். அப்போது கிணற்றில் போதிய பிராணவாயு (ஆக்ஸிஜன்) இல்லாததால், மூச்சுத்திணறி நீரில் விழுந்து உயிரிழந்தான். அவனைத் தேடி கிணற்றினுள் இறங்கிய 13 மற்றும் 15 வயது சகோதரிகளும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையறிந்த அப்பகுதியில் வசிக்கும் 4 பேர், குழந்தைகளை மீட்க கிணற்றுக்குள் இறங்கினர். அவர்களும் நீரில் விழுந்து உயிரிழந்தனர். பின்னர், மீட்புக் குழுவினரால் சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.
பொதுவாக கிணறுகளில் காலையில் பிராணவாயுவின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால், மாலையில் அதன் அளவு மிகமிகக் குறைவாக காணப்படும். பிராணவாயு குறைவாக இருக்கும் சமயத்தில் கிணற்றினுள் இறங்குபவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்று விடுவார்கள்.
கிணற்றினுள் காலையில் இறங்கிய டய் சின்னுக்கு ஒன்றும் ஆகாத நிலையில், மாலையில் அதனுள் இறங்கிய 7 பேர் உயிரிழந்ததற்கு பிராணவாயு குறைவாக இருந்ததே காரணம் என்று சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.