

12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சினோவாக் கரோனா தடுப்பூசி செலுத்த இந்தோனேசிய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து இந்தோனேசியாவின் உணவு மற்றும் மருத்துவ அமைப்பு கூறும்போது, “ இந்தோனேசியாவில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சீனாவின் சினோவாக் கரோனா தடுப்பூசியைச் செலுத்த பரிந்துரை செய்கிறோம். இந்தோனேசியாவில் அஸ்ட்ராஜெனகா, சினோபார்ம் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது சினோவாக் கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக 20,000க்கும் அதிகமாக கரோனா பதிவாகி வருகிறது. பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு இந்தோனேசியாவில் கரோனா மீண்டும் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும். இந்தோனேசியாவில் 21 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 ஆயிரம் பேர் வரை பலியாகிவுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.