

பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் தொடர்பு உள்ளதாக கல்லூரி நடத்தும் ஒருவர் உட்பட உயர்கல்வி பயின்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கராச்சியில் கடந்த மே 13-ம் தேதி பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 45 ஷியா முஸ்லிம்களை கொன்றனர். இத்தாக்குதல் நடத்தி யவர்களுக்கு நிதியுதவி மற்றும் மூளைச் சலவை செய்ததாக, அடில் மசூத் பட், காலித் யூசூப் பாரி, சலீம் அகமது, முகம்மது சுலேமான் சயீத் ஆகிய 4 பேரை தீவிரவாத எதிர்ப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த 4 பேரில் அடில் மசூத் பட், அமெரிக்காவில் இன்டி யானா பல்கலைக்கழகத்தில் பிபிஏ, நியூயார்க் ஃபோர்தாம் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ. படித்தவர். மேலும் கராச்சியில் கணக்குப் பதிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி நடத்தி வருகிறார். இக்கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 2-வது நபரான காலித் யூசுப் பாரி, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயர். இவர் பாகிஸ்தான் இன்டெர் நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத் தில் பணியாற்றியவர். பேருந்து தாக்குதல் வழக்கில் முதலில் இவரிடம் நடத்தப்பட்ட விசார ணையின் அடிப்படையில் பட் உள்ளிட்ட மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கராச்சி பேருந்து தாக்குதலில் மூளையாக செயல்பட்ட அப்துல்லா யூசுப் மற்றும் அல்-காய்தா அமைப்பின் கராச்சி பிரிவு தலைவருடன் பாரிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3-வது நபரான சலீம், 1992-93-ல் தீவிரவாத குழு ஒன்றுக்கு நன்கொடை திரட்டியவர். மேலும் தங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்துள்ளார். 4-வது நபரான சுலேமான், அப்துல்லாவின் மைத்துனர். மசூதிகளுக்கு வெளியே நன்கொடை திரட்டிவந்த இவர் மசூதிகள், வீடுகளில் பிரசங்கமும் செய்துள்ளார்.
இந்த 4 பேரில் இருவரின் மனைவியர்களும் ஐ.எஸ். மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக வீடியோக்கள், பிரசங்கம் மூலம் நன்கு படித்த பணக்கார பெண்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளனர்.
இத்தகவலை பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் படையின் தலைவர் ராஜா உமர் கட்டாப் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
பணக்கார்கள் மற்றும் நன்கு படித்தவர்கள் தீவிரவாத பாதையில் செல்வது மிகவும் கவலை அளிப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.