

புத்தாண்டையொட்டி ஐரோப்பிய யூனியன் நாடுகளின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதால் பட்டாசு வெடிப்பு மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்த உளவுத்துறை தகவல்களால் இன்று இரவு கொண்டாடப்பட இருக்கும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எல்லைகள் ஏற்கெனவே பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
பெல்ஜியத்தில் கொண்டாட்டம் ரத்து
முக்கியமாக அச்சுறுத்தல் இருக்கும் பாரீஸ், லண்டன், பெர்லின் மற்றும் மாஸ்கோவில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தேவையற்ற பீதிகளையும் அசம்பாவிதங்களையும் தடுக்க முக்கிய நகரங்களில் கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்கவும் வானவேடிக்கைக்கும் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டசலா அப்துல்லாவின் நெருக்கமானவர்கள் சிலர் பெல்ஜியத்தில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தலைநகர் பிரஸ்ஸல்சில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க முழுவதுமான தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல, மாஸ்கோவில் மக்கள் கொண்டாட்டத்துக்கு அதிக அளவில் கூடும் சிவப்பு சதுக்கம் மூடப்பட்டுள்ளது.
இருவர் கைது
புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த இருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தாக்குதலுக்கு நடத்த சதி தீட்டப்பட்டதற்கான சில ஆதாரங்களும் ஐ.எஸ். கொள்கைகள் கொண்ட ராணுவ உடைகளும் இருந்தன. இவர்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.