Published : 12 Dec 2015 09:46 AM
Last Updated : 12 Dec 2015 09:46 AM

உலக மசாலா: மது அருந்துபவர்களுக்கு ஒரு பாடம்...

மதுவுக்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள்வது மிகவும் துயரமான விஷயமாக இருக்கிறது. சீனாவில் வசிக்கும் 30 வயது ஸாங் ரூய், மதுவுக்கு மிக மோசமான அளவில் அடிமையாகியிருந்தார். அவர் குடும்பம் எவ்வளவோ முயன்றும் அவரை மீட்க முடியவில்லை. ஒருகட்டத்தில் ஸாங்கின் வேலை பறிபோனது. குடும்பமும் பிரிந்து சென்றது. குடிக்க பணமும் இல்லாமல், ஆறுதல் அளிக்க குடும்பமும் இல்லாமல் மிகவும் துயரமான நிலைக்குச் சென்றார் ஸாங். தானே தன்னை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அவரால் மீள முடியவில்லை.

ஏதாவது பொருட்களை விற்றுக் குடிக்க ஆரம்பித்தார். ஸாங்கின் அம்மா மனம் வருந்தி, இதிலிருந்து வெளிவருமாறு மன்றாடினார். இனி தான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், இந்தப் பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார் ஸாங். ஒரு சிறிய அறைக்குள் சென்றார். மிகப் பெரிய சங்கிலியைக் கழுத்தில் இணைத்துக்கொண்டார். சங்கிலியைப் பூட்டி, சாவியை அம்மாவிடம் கொடுத்தார். ஆறு மாதங்களாக அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை. லேப்டாப்பும் டிவியும் அந்த அறையில் இருக்கின்றன. நான்கு மீட்டர் தூரம் வரை சங்கிலியுடன் நடக்க முடியும் என்பதால் அறைக்குள் நடப்பார். உடற்பயிற்சி செய்வார்.

அம்மா கொடுக்கும் உணவைச் சாப்பிடுவார். சிறிது நேரம் டிவி பார்ப்பார். மீதி நேரம் தூங்குவார். ‘’ஒரு லாரி டிரைவராக இருந்தேன். நல்ல வருமானம். அழகான குடும்பம். திடீரென்று மதுவுக்கு அடிமையானேன். அலுவலகம், மனைவி, குழந்தைகளை மறந்து வன்முறையில் இறங்கினேன். குடும்பத்தை இழந்த பிறகுதான் உயிர் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. என்னை நானே சிறைப்படுத்திக்கொண்டேன். இந்த 6 மாதங்களில் ஒரு முறைகூட மது அருந்தவில்லை. கையில் மது பாட்டில் இருந்தாலும் குடிக்க மாட்டேன் என்று தோன்றுகிறதோ, அன்று சங்கிலியை விடுவித்து வெளியே வருவேன். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். மீண்டும் என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்’’ என்கிறார் ஸாங்.

உங்கள் வாழ்க்கை மது அருந்துபவர்களுக்கு ஒரு பாடம்…

எவ்வளவு பணம் கொடுத்து ஸ்மார்ட் போன்களை வாங்கினாலும் குறிப்பிட்ட காலத்தில் அழுக்காகிவிடுகின்றன. வாய் மூலமும் காது மூலமும் பாக்டீரியாவும் கிருமிகளும் பரவி, போன்களில் தொற்றிக்கொள்கின்றன. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஜப்பானிய நிறுவனம் கியோசிரா, தண்ணீரால் சுத்தம் செய்யக்கூடிய போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. Digno Rafre என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண்ட்ராய்ட் போன் தண்ணீர், சோப் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டி ருக்கிறது.

அதனால் போனை சோப் போட்டு, தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம். கேமரா உட்பட எல்லா பாகங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஸ்பீக்கர் மட்டும் இந்த போனில் கிடையாது. கீழே விழுந்தாலும் சிராய்ப்பு ஏற்படாது. இந்த போன் ஜப்பானில் மட்டுமே கிடைக்கிறது. வெளிநாடுகளில் விற்பனை செய்யும் திட்டம் இதுவரை இல்லை என்று கியோசிரா டெலிகாம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விரைவிலேயே இந்தத் தொழில்நுட்பம் பரவத்தான் போகிறது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x