Published : 23 Jun 2021 06:37 PM
Last Updated : 23 Jun 2021 06:37 PM

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகினார் வாரன் பஃபெட்

பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகுவதாக உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் அறிவித்திருக்கிறார்.

பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா இருவரும் பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றனர்.
உலகம் முழுவதும் பல்வேறு தொண்டுகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. அண்மையில் கூட இந்த அமைப்பு கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கும், மற்ற தடுப்பூசிப் பணிகளுக்கும் 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். இல்லற வாழ்வில் இனி பிரிந்து பயணித்தாலும், மனிதாபிமான நடவடிக்கைகளில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தொண்டு நிறுவனம் சார்ந்து எங்களது பணிகளில் இணைந்து பயணிப்போம் என்று அவர்கள் இருவரும் கூட்டாகக் கூறியிருந்தாலும், அவர்களின் பிரிவு அறிவிப்புக்குப் பின்னர் தொண்டு நிறுவனத்தின் பணிகள் ஆட்டம் கண்டன.

இதனால், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகுவதாக உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் லட்சியமே எனது லட்சியமும். நான் எனது பெர்க்‌ஷைர் ஹாத்தவே பங்குகளில் 50%ஐ தானமாகக் கொடுத்துவிட்டேன். ஆகையால், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் அறங்காவலர் பதவியிலிருந்து விலகுகிறேன் எனக் கூறியுள்ளார்.

யார் இந்த பஃபெட் ?

அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபெட் தனது 11வது வயதில் பங்குச்சந்தை முதலீட்டைத் தொடங்கினார். பங்குச்சந்தை முதலீடுகளின் வாயிலாக வந்த வருமானத்துக்கு 13 வயதில் வருமான வரி கட்டினார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தகவலின்படி, இவரது சொத்து மதிப்பு 8,600 கோடி டாலர். ஆனால், தன்னுடைய சொத்தில் 99 சதவிகிதத்தைத் தானமாக வழங்க உறுதி அளித்திருக்கிறார். இதுவரை தனது சொத்திலிருந்து 50% த்தை தானமாகக் கொடுத்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x