

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபிஸ் சயீத் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானின் லாகூர் நகரில் அமைந்துள்ள ஐவ்ஹர் டவுனில், மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபிஸ் சயீத்தின் வீட்டின் முன்பகுதியில் காரில் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்ததில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த 3 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்பு காரணமாக சுற்றுப்புறங்களிலிருந்த பல வீடுகள் பாதிக்கப்பட்டன.
இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த குண்டுவெடிப்பைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தானில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் அரசை விமர்சித்துள்ளன.