Published : 23 Jun 2021 05:34 PM
Last Updated : 23 Jun 2021 05:34 PM

அச்சுப் பிரதியை நிறுத்துகிறது ஹாங்காங்கின் ஆப்பிள் டெய்லி பத்திரிகை

ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு நாளிதழலான ஆப்பிள் டெய்லி வரும் சனிக்கிழமை ஜூன் 26ம் தேதி முதல் அச்சுப்பிரதியை நிறுத்துகிறது. இதனை அந்த நாளிதழின் நிர்வாகக் குழு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், "ஹாங்காங்கில் தற்போது நிலவும் சூழல் காரணம் ஆப்பிள் டெய்லி இனி அச்சுப் பிரதியாகக் கிடைக்காது. வரும் ஜூன் 26 2021 தான் கடைசியாக இந்த நாளிதழ் அச்சேறுகிறது. அதன்பின்னர் அன்றைய தினது இரவு 11.59 முதல் டிஜிட்டல் வடிவில் கிடைக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையும், கைதும், சொத்து முடக்கமும்..

ஆப்பிள் டெய்லி பத்திரிகை ஜனநாயக சார்பு கொண்ட நாளிதழாக இயங்கிவந்தது. இந்தப் பத்திரிகை சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக செய்தி வெளியிட்டு வந்தது. சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாகவும் ஹாங்காங்கின் சுதந்திரத்தை முடக்குவதாகவும் விமர்சித்து வந்தது.

மேலும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆழமான தலையங்கங்களையும் கட்டுரைகளையும் பிரசுரித்துவந்தது. இது ஹாங்காங்க் சுதந்திர தாகம் கொண்டவர்களுக்கு எழுச்சியூட்டுவதாகவே அமைந்தது.

இதனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் பத்திரிகையின் உரிமையாளர் ஜிம்மி லாய் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜிம்மி லாயின் மகன்கள் இருவரும் கூட சிறையில் தான் உள்ளனர்.

இந்த நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறி நேற்று 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அந்த பத்திரிகை அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இது ஹாங்காங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தகைய சூழலில், ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் மூத்த நிர்வாகிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

அதுமட்டுமல்லாது ஆப்பிள் டெய்லி பத்திரிகை நிறுவனத்துக்குச் சொந்தமான 18 மில்லியன் ஹாங்காங் டாலர் சொத்துக்கள் முடக்கப்பட்டது.

இந்நிலையில் தான், ஆப்பிள் டெய்லி வரும் சனிக்கிழமை ஜூன் 26ம் தேதி முதல் அச்சுப்பிரதியை நிறுத்துகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆப்பிள் டெய்லி வாசகர்கள் டிஜிட்டல் தளத்தில் பத்திரிகையை தொடர்ந்து படிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x