Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

சீன ஆய்வகத்தில் கரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம்: அமெரிக்க விஞ்ஞானி அந்தோணி ஃபவுசி கருத்து

அந்தோணி ஃபவுசி

வாஷிங்டன்

சீன ஆய்வகத்தில் கரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி அந்தோணி ஃபவுசி (80) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியில், வைரஸ் பரவல் தடுப்பு குழுவின் தலைவராக விஞ்ஞானி அந்தோணி ஃபவுசி நியமிக்கப்பட்டார். எனினும் வைரஸ் தடுப்பு பணியில் ட்ரம்புக்கும் அந்தோணி ஃபவுசிக்கும் இடையே ஏராளமான கருத்து வேறுபாடுகள் எழுந்தன. சிலர் ட்ரம்புக்கும் வேறு சிலர் அந்தோணிக்கும் ஆதரவு அளித்தனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, கடந்த ஜனவரியில் அவர் புதிய அதிபராக பதவி யேற்றுக் கொண்டார். புதிய அரசு பதவியேற்ற பிறகு, அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகராக அந்தோணி ஃபவுசி நியமிக்கப்பட்டார்.

இந்த பின்னணியில் கரோனா வைரஸ் குறித்து ஃபவுசி பொய்களை கூறியதாகவும் அவரது பொய்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாகவும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தலைவர்களும் பல்வேறு அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. தலைமை மருத்துவ ஆலோசகர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஆண்டுமார்ச், ஏப்ரல் மாதங்களில் அந்தோணி ஃபவுசி அதிகாரபூர்வமாக அனுப்பிய இ-மெயில்கள் குறித்த விவரங்களை சுதந்திர தகவல் சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க அரசிடம் இருந்து ஊடகங்கள் பெற்றுள்ளன. இதன்மூலம் பல்வேறு விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அமெரிக்காவில் வைரஸ் பரவத் தொடங்கியபோது பொதுமக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அந்தோணி ஃபவுசி கூறினார். ஆனால் வைரஸ் பரவல் அதிகரித்ததால், அவர் தனது முடிவை மாற்றி பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றுஅறிவுறுத்தினார். அவரது இ-மெயில் பரிமாற்றங்களில் இந்தஉண்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் கூறியபோது மறுத்தார்

கரோனா வைரஸ் இயற்கையாக உருவாகவில்லை. சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியபோது, அந்த கருத்தை அந்தோணி ஃவுசி திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் அண்மையில் அவர் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "சீன ஆய்வகத்தில் கரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம். இந்த கோணத்திலும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்" என்று யோசனை தெரிவித்துள்ளார்.

அந்தோணி ஃபவுசி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதாக அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் சிறப்பு நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது பரிந்துரைகளில் அவ்வப்போது மாற்றங்கள் இருந்துள்ளன. ஒரு விஞ்ஞானி என்ற வகையில் அறிவியல்பூர்வமான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே எனது பரிந்துரைகளைக் கூறுகிறேன். கரோனா வைரஸ் தொடர்பான அறிவியல் உண்மைகள் மாறிக் கொண்டே வருகின்றன. இதன்காரணமாக எனது பரிந்துரைகளிலும் மாற்றங் கள் இருக்கின்றன.

என்னை விமர்சனம் செய் பவர்கள், என்னை அல்ல, அறிவியலை விமர்சனம் செய்கின்றனர். என் மீதான விமர்சனங்களை நான் கருத்தில் கொள்வதில்லை. என்னை ஹிட்லர் என்றுகூட சிலர் விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனங்கள் என்னை பாதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x