

மாஸ்கோவில் ஒரே நாளில் 9,120 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில்17,906 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 466 பேர் பலியாகினர். தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 9,102 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ரஷ்யாவில் இதுவரை 52 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்திவருவதே கரோனா பரவலுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 3.2 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வெளிநாட்டவரும் ரஷ்யாவில் வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். மேலும், கரோனா தடுப்பூசிகள் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன. ஸ்புட்னிக் கரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.