

அடடா! கண்கொள்ளாக் காட்சி!
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிவப்பு நண்டுகள் ஏராளமாக வசிக் கின்றன. காடுகளில் உள்ள வளைகளில் வசிக்கும் நண்டுகள், இனப் பெருக்கக் காலத்தின் போது காட்டை விட்டு வெளியேறுகின்றன. கடற் கரையில் வளை தோண்டி, குடும்பம் நடத்துகின்றன. ஒரு சில வாரங்களில் பெண் நண்டுகள் வளைகளில் முட்டை களை இடுகின்றன. 4,5 நாட்கள் முட்டைகள் இட்ட பிறகு, லட்சக் கணக்கான நண்டுகள் மீண்டும் காடுகளுக்குத் திரும்புகின்றன. காட்டுக்கும் கடலுக்கும் 20 கி.மீ. தூரம். கூட்டம் கூட்டமாக இவ்வளவு தூரத்தையும் கடந்து செல்கின்றன. இந்த ஆண்டு நகரின் முக்கிய சாலைகள், பாலங்கள் மீது எல்லாம் ஏறி தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளன. சிவப்பு நண்டுகளின் சாலை ஆக்கிரமிப்பால் மனிதர்களுக்கான போக்குவரத்தைத் தடை செய்திருந்தது அரசாங்கம்.
உருவத்துக்கும் திறமைக்கும் தொடர்பு இல்லை!
அமெரிக்காவில் வசிக்கும் 17 வயது ஆடம் ரீட், ஹெரிடேஜ் பள்ளி கால்பந்து அணியின் முன்னணி வீரர். 4 அடி 5 அங்குல உயரமும் 43 கிலோ எடையும் கொண்ட வீரராக இருக்கிறார். தேசிய அணியில் இடம்பெற்றிருக்கும் ஆடமை முதல் முறை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் போட்டி முடிந்தவுடன் ஆடமின் திறமை கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள போட்டிப் போடுகிறார்கள். ‘‘புது அணி, புது மனிதர்களைச் சந்திக்கும்போது நான் மோசமான கிண்டலுக்கு உள்ளாவேன். அதற்காக ஒருநாளும் கவலைப்பட மாட்டேன். அவர்களுக்கு என் ஆட்டத்தின் மூலம் மட்டுமே பதில் அளிப்பேன். அவர்கள் தானாகவே மரியாதையும் அன்பையும் கொடுப்பார்கள். என் உயரம் குறித்து எனக்குக் கவலை இல்லை. என்னால் நடக்க முடிகிறது. ஓட முடிகிறது. சிறந்த விளையாட்டு வீரராக இருக்க முடிகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?’’ என்று கேட்கிறார் ஆடம். உருவம் சிறிதாக இருந்தாலும் ஆடமின் இதயம் மிகப் பெரியது. மிகவும் அன்பானது. எல்லோரையும் சரிசமமாக மதிக்கக்கூடியது என்கிறார்கள் அவரது பள்ளி நண்பர்கள்.
இயற்கையின் விநோதங்களில் ஒன்று வீனஸ்!
தென் கரோலினாவைச் சேர்ந்த கிறிஸ்டினா, கிறிஸ் தம்பதியர் வீனஸ் என்ற விநோதமான பூனையை வளர்த்து வருகின்றனர். வீனஸ் முகத்தில் ஒரு பாதி கறுப்பாகவும் மறு பாதி பழுப்பாகவும் இருக்கிறது. அதாவது கருஞ்சிறுத்தையும் புலியும் கலந்த முகமாகத் தெரிகிறது. கறுப்புப் பகுதியில் மஞ்சள் விழியும் பழுப்பு பகுதியில் நீல விழியும் இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. வீனஸின் தோற்றத்துக்குப் பல்வேறு உயிரியியல் காரணங்கள் உள்ளன, இரண்டு கருக்கள் சேர்ந்து ஓர் உயிராகப் பரிணமித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வீனஸுக்கு ஃபேஸ்புக் பக்கம் இருக்கிறது. 9,13,000 பேர் இந்தப் பக்கத்தை லைக் செய்திருக்கிறார்கள். அதில், ‘‘நான் மேக்அப் போட்டுக்கொள்வதில்லை. என் படத்தை வைத்து போட்டோஷாப் செய்வதையும் வண்ணம் தீட்டுவதையும் நான் அனுமதிப்பதில்லை. இயற்கையாகவே நான் அபூர்வமானவளாக இருக்கிறேன்’’ என்று சொல்கிறது வீனஸ்! நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வீனஸ் இடம்பெற்று வருகிறது.