Published : 17 Jun 2021 16:56 pm

Updated : 17 Jun 2021 16:56 pm

 

Published : 17 Jun 2021 04:56 PM
Last Updated : 17 Jun 2021 04:56 PM

செயற்கைப் பல் இல்லை, கண் இமைகள் இல்லை: அசல் அழகில் ஜொலிக்கும் டிக்டாக் நட்சத்திரம்

toothless-tiktok-catfish-user-story

சமூக வலைதளங்களில் தங்களை அழகாக, கவர்ச்சிகரமாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் பாலின பேதம் இன்றி அனைவரிடமும் இருக்கிறது. சிறப்பான ஒரு புகைப்படத்தைப் பதிவேற்ற, புகைப்படம் எடுக்கத் தெரிந்த நண்பனைக் கட்டாயப்படுத்திப் படமெடுக்க வைக்கும் பயனர்கள் பலர்.

சமூகம் தங்களை அழகானவனாக/ அழகானவளாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சிலர் செய்யும் பிரயத்தனங்களைப் பற்றிய நையாண்டி, கேலி, கிண்டல்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதிலும் சமூக வலைதளங்களில் ட்ரால் என்கிற பெயரில் கிண்டல் செய்பவர்களிடம் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். மிதமான கிண்டல்களிலிருந்து வக்கிரமான ஆபாசப் பேச்சுகள் வரை, ஜனநாயகச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் இணைய வெளியிலும் அதிகமே.


டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வந்த பின்னர் தோற்றங்களுக்கான முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உங்கள் கருத்து, எண்ணம், விமர்சனம் என எழுத்துபூர்வமாக அகத்தின், முகத்தின் அழகைக் காட்டலாம்.

ஆனால், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் எழுத்துகளுக்கு வேலையே இல்லை. புகைப்படம், அதில் இருப்பவரின் அழகு, அந்தப் புகைப்படத்தை மெருகேற்றப் பயன்படுத்தியுள்ள ஃபில்டர்கள் என இவையே பிரதானம். இன்ஸ்டாகிராமின் நீட்சியாக டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படத்தின் இடத்தைக் காணொலிகள் பிடித்துக் கொண்டுள்ளன. டிக்டாக்கில் அழகுக்காகப் பிரபலமானவர்களும் பலர் இருக்கின்றனர்.

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த அலிஸியா என்ற பெண்மணி தனது உண்மையான அழகைக் காட்டியதால் டிக்டாக் நட்சத்திரமாக ஜொலித்துள்ளார்.

36 வயதான அலிஸியாவுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. 4 குழந்தைகளும் உள்ளனர். இதில் கடைசி முறையாக அவர் கருவுற்றபோது அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக அவரது பற்கள் மோசமாக சிதைவுக்குள்ளாகின. இதனால் தனது மொத்தப் பற்களையும் இழந்துள்ளார் அலிஸியா.

இதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு செயற்கைப் பற்களை கட்டிக் கொண்டுள்ளார். அலிஸியா இதோடு நின்றுவிடவில்லை, தனது டிக்டாக் பக்கத்தில் அட்டகாசமான மேக்கப், கவர்ச்சிகரமான உடைகளோடு காணொலி பகிரும் அதே வேளையில், தனது போலிப் பற்கள், மேக்கப் என செயற்கைப் பூச்சுகளை நீக்கிவிட்டு தனது அசல் முகத்தோடு காணொலி பகிர்ந்துள்ளார்.

மேலும் போலிக் கவர்ச்சிக்கும், நிஜக் கவர்ச்சிக்கும் ஒப்பீடு செய்யும் காணொலிகளையும் பகிர்ந்துள்ளார். சில காணொலிகளில் ஒப்பனை, சவுரி முடி, செயற்கைப் பற்கள், போலிக் கண் இமைகள் என தான் மேக்கப் அணிந்து எப்படித் தயாராகிறேன் என்பதையும் மொத்தமாக ஆவணப்படுத்தியுள்ளார்.

அலிஸியாவின் நேர்மையை, அவர் வெளிப்படையாக இருப்பதைப் பாராட்டி நாளுக்கு நாள் அவரைப் பின்தொடரும் ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 10 லட்சம் பேர் தன்னைப் பின்தொடர்வதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார் அலிஸியா.

ஆனால், எல்லோரும் நல்ல வார்த்தைகள் மட்டுமே பேசினால் அது சமூக வலைதளமாகவே இருக்க முடியாதே. அலிஸியாவின் இந்தத் தோற்ற மாற்றம் சட்டவிரோதமானது, ஏமாற்று வேலை, மாந்திரீகம் போன்றது என்றெல்லாம் விமர்சிப்பவர்களும் ஒரு பக்கம் இருக்கின்றனர். மேலும் பல்லில்லாத இவரது தோற்றத்தைக் கிண்டல் செய்யும் விதமாக இவரைத் தொடர்ந்து பூனை மீன் (catfish/கெளுத்தி மீன்) என்று சிலர் பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்தனர்.

அலிஸியா அதையே தனது பயனர் பெயராக மாற்றி டிக்டாக்கில் தன்னைப் பல்லில்லாத டிக்டாக் பூனை மீன் (Toothless TikTok Catfish) என்றே பெருமையாக அழைத்துக் கொள்கிறார்.

"எனது தோற்றத்தைக் கிண்டல் செய்பவர்களிடம் நான் சொல்ல விரும்புவது இதைத்தான். நான் திருமணமாகி, 4 குழந்தைகளுடன், 15 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். நான் ஒப்பனைக் கலை பயின்றவளும் கூட. எனவே நான் எனக்காக ஒப்பனை செய்துகொள்கிறேன். எல்லோரையும் போல அதை அணியும் உரிமை எனக்கும் உண்டு" என்று தன்னம்பிக்கையுடன் கம்பீரமாகச் சொல்கிறார் அலிஸியா.


தவறவிடாதீர்!

டிக் டாக் பிரபலம்டிக் டாக் நட்சத்திரம்அலிஸியா டிக்டாக்Toothlesstiktokgoldfishநம்பிக்கைக் கதைதன்னம்பிக்கைக் கதைநம்பிக்கை பெண்கள்சமூக வலைதளப் பிரபலம்அசல் அழகுசமூக வலைதள அழகுTiktok celebrityTiktok aliciaTiktok starSnap in dentureFake beauty

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x