

ஜப்பானின் புகழ்பெற்ற மலையேற்ற வீராங்கனை கீ தனிகுச்சி (43), ஹொக்கைடோ மாகாணம் டைசெட்சுஜனில் உள்ள குரோடேக் பனிமலையிலிருந்து இறங்கும்போது நிகழ்ந்த விபத்தில் பலியானார்.
இதுகுறித்து அவரது நண்பரும் மலேயேறும் வீரருமான ஹிரோஷி ஹகிவாரா கூறும்போது, “சுமார் 1,984 மீட்டர் (6,510 அடி) உயரமுள்ள குரோடேக் பனிமலையில் தனிகுச்சி மற்றும் 4 பேர் ஏறினர். பின்னர் அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தபோது தனிகுச்சி தவறி விழுந்ததில் இறந்துவிட்டார்” என்றார்.
கடந்த 2007-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தனிகுச்சி, கடந்த 2009-ம் ஆண்டு புகழ்பெற்ற பயோலெட் டி’ஓஆர் (கோல்டன் ஐஸ் ஆக்ஸ்) விருதை வென்றார். இதன்மூலம் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் என்ற புகழ் பெற்றார். சிறந்த மலையேறும் வீரர்களுக்கு பிரான்ஸ் பத்திரிகையான மோன்டக்னஸ் சார்பில் 1991 முதல் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.