

பொதுவெளியில் முகக்கவசம் அணியாத பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் ஊடகங்கள் தரப்பில், “ஸா பாலோ பகுதியில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட பேரணி ஒன்றில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவும் கலந்துகொண்டார். அந்தப் பேரணியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை போல்சனோரா பின்பற்றாத காரணத்துக்காக அவருக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியானது.
முகக்கவசம், தனிமைப்படுத்துதல் தேவையில்லாத ஒன்று என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா பகிரங்கமாகத் தெரிவித்தார். இதன் காரணமாக மருத்துவ நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது வெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற ஆலோசனை பரிசீலனையில் உள்ள நிலையில், ஜெய்ர் போல்சனோராவுக்கு முகக்கசவம் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் இதுவரை 1.7 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,80,000 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 24% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.