

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன சுகாதாரத் துறை தரப்பில், “ சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூரில் உறுதி செய்யப்பட்ட கரோனா வைரஸ் அனைத்தும் கவுங்டாங் மாகாணத்தில் உறுதிச் செய்யப்பட்டது. சீனாவில் இதுவரை 91,394 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4, 636 பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை 70 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவில் சினோபார்ம், சினோவாக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. சீனத் தடுப்பூசிகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன.
மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.