

வங்கதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இருநாடுகள் இடையேயான எல்லை தொடர்பான ஒப்பந்தம், தீஸ்தா நதி நீர் பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் ஹசன் முகமது அலியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதவிர, சட்டவிரோத குடியேற்றம் குறித்தும் ஆலோசித்துள்ளதாக தெரிகிறது.
வெளியுறவுத் துறை அமைச்சரானவுடன் சுஷ்மா தனியாக மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இதற்கு முன்பு பூடான் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் குழுவில் சுஷ்மா ஸ்வராஜ் இடம்பெற்றிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் ஏதும் இந்தப் பயணத்தின் போது கையெழுத்தாகாவிட்டாலும், இந்த சந்திப்பு எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதுணையாக இருக்கும் என கருதப்படுகிறது. வர்த்தக மேம்பாடு தொடர்பாக அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
முன்னதாக நேற்றிரவு வங்கதேசம் வந்தடைந்த சுஷ்மா ஸ்வராஜையும், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங்கையும் அப்துல் ஹசன் முகமது அலி வரவேற்றார்.
மம்தா எதிர்ப்பு:
மத்தியில் முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது வங்கதேசத்துடனான தீஸ்தா ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவிடாமல் மம்தா பானர்ஜி தடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுஷ்மா வங்கதேச பயணத்தின் போது, எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்றிரவு மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து ஆலோசித்தார்.