ஆப்பிரிக்க நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் உள்ளன: உலக சுகாதார அமைப்பு

ஆப்பிரிக்க நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் உள்ளன: உலக சுகாதார அமைப்பு
Updated on
1 min read

10-ல் 9 ஆப்பிரிக்க நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மாட்சிடிசோ மொய்தி கூறும்போது, “தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக 10-ல் 9 ஆப்பிரிக்க நாடுகள் கரோனா தடுப்பூசி இலக்கை எட்ட முடியாமல் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தங்கள் மக்கள்தொகையில் 10% பேருக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்தவது தற்போது முடியாது. இந்த இலக்கை ஆப்பிரிக்க நாடுகளால் அடைய முடியாது.

ஏனெனில் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு உள்ளவர்களுக்கே தடுப்பூசி செலுத்த 2.5 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. கரோனா தடுப்பூசிகள் கரோனா தொற்று மற்றும் இறப்பைத் தடுக்கின்றன. எனவே உலக நாடுகள் கரோனா தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சமநிலையின்மை நிலவுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in