

ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போகோ ஹராம் தீவிரவாத பிரிவின் தலைவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் தலைவர் அபூபக்கர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை போகோ ஹராம் குழுவின் படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அபூபக்கர் இறைவனடி சேர்ந்துவிட்டதாக அவர்கள் ஆடியோ வெளியிட்டுள்ளனர். நைஜீரிய புலனாய்வு துறையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூபக்கரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
நைஜீரியா நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வந்தன.
இதன் பின்னணியில், நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் இருந்தனர். அவர்கள், அடிக்கடி தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக பள்ளிச் சிறுவர், சிறுமிகளை கடத்திச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது.
போகோ ஹராம்
2002-ல் சாதாரணமாக தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வருகிறது.
போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர்.
இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.