

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
காந்தியடிகளின் இரண்டாவது மகனான மணிலால் காந்தியின் மகள் இலா காந்தி. இவர் மனித உரிமை ஆர்வலர். இலா காந்தி பல்வேறு சமூக செயல்களுக்கான அமைதி விருதை பெற்றிருக்கிறார். மேலும் 1994 முதல் 2004 வரை தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவரது கணவர் ராம்கோபின். இவர் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவர்களது மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின் (வயது 56). தென் ஆப்பிரிக்காவில் பிறந்து அங்கேயே வசித்து வருகிறார். இவர் சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் ஆஷிஷ் லதா ராம்கோபின் மீது மகராஜ் என்ற தொழிலதிபர் ஒருவர் பண மோசடி செய்ததாக புகார் அளித்தார்.
அந்த புகாரில், சணல் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்டர் கிடைத்திருப்பதாகவும், அந்த ஆர்டருக்கான இறக்குமதி வரி செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்றும், இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி கடனாக வேண்டும் எனவும் வரும் லாபத்தை பகிர்ந்து கொள்வதாகவும் ஆஷிஷ் லதா ராம்கோபின் தன்னிடம் கேட்டதாகவும் மகராஜ் தெரிவித்துள்ளார்.
சணல் ஒப்பந்தம் குறித்த ஆர்டர் காப்பியையும் அவரிடம் ஆஷிஷ் லதா காட்டியிருக்கிறார். இன்வாய்ஸ், மற்றும் சில ஆவணங்களை போலியாக உருவாக்கி மகாராஜிடம் ஆஷிஷ் லதா காண்பித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை மகாராஜும் நம்பியுள்ளார்.
இதையடுத்து மகாராஜ் ஆஷிஷ் லதாவுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதையடுத்து மகாராஜ் கடந்த 2015ம் ஆண்டு டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .
வழக்கு ஆரம்பித்தபோது, ஆஷிஷ் லதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து மூன்று கைத்தறி கன்டெய்னர்களை இறக்குமதி செய்வதாக பொய் தகவல் கூறி போலி இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்களை ஆஷிஷ் லதா வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.