

பாரீஸ் தாக்குதல் சம்பவத்துக்கு மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சையது கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சையது மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் பாகிஸ் தான் அரசு செவிசாய்க்க வில்லை. ஜமா உத் தவா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அவர் தீவிரவாத செயல்களுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.
அவரை சர்வதேச தீவிரவாதி யாக அறிவித்துள்ள அமெரிக்க அரசு, ஹபீஸை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.67 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாரீஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஹபீஸ் சையது கண்டனம் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித் துள்ள பேட்டியில் கூறியிருப்ப தாவது:
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை மேற்கத்திய நாடுகள்தான் வளர்த் தன என்று பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஒப்புக் கொண்டுள்ளார். அதன்விளை வாகதான் ஐ.எஸ். அமைப்பு இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது.
பாரீஸ் தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு மட்டுமே காரணம். பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் எவ்விதத் திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகவும் சர்வ தேச தீவிரவாதியாகவும் அறிவிக் கப்பட்டுள்ள ஹபீஸ் சையது பாரீஸ் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று மேற்கத்திய ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஹபீஸ் சையது உள்ளிட்டோ ருக்கு பாகிஸ்தான் அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது. அவரது ஜமா உத்தவா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களை பாகிஸ்தான் அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் தொண்டு நிறுவன போர்வையில் ஹபீஸ் சையது தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வருவதாக இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.