Published : 07 Jun 2021 06:24 PM
Last Updated : 07 Jun 2021 06:24 PM

திருமணம் குறித்த பதில்: பாகிஸ்தான் நெட்டிசன்களால் விமர்சனத்துக்குள்ளான மலாலா

இரு நபர்கள் இணைந்து வாழ்வதற்கு திருமணம் அவசியமா? என்று பிரபல 'வோக்' (VOGUE) இதழுக்கு மலாலா அளித்த நேர்காணலுக்காக, பாகிஸ்தான் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

பிரிட்டனின் பிரபல 'வோக்' இதழில் மலாலா நேர்காணல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. அதில் மலாலாவின் புகைப்படங்களுடன் இதுவரை அவரிடம் கேட்கப்படாத கேள்விகளும் கேட்கப்பட்டன.

அதில், திருமணம் குறித்த கேள்விக்கு மலாலா பதிலளிக்கும்போது, “மக்கள் ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எனக்கு இதுவரை புரியவில்லை. இரு நபர்கள் இணைந்து வாழ்வதற்குத் திருமணம் அவசியமா? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் நபருடன் வாழ விரும்புகிறீர்கள் அல்லவா? அப்படி இருக்க ஏன் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டுத் திருமணம் செய்து கொள்கிறீர்கள். அவ்வாறு இல்லாது நீங்கள் ஏன் துணையாளராக வாழ்க்கையைத் தொடரக் கூடாது” என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து மலாலா திருமணத்துக்கு எதிராகப் பேசிவிட்டார் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சிக்கத் தொடங்கினர்.

பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு மலாலா சொந்தக்காரர் ஆனார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன்னர்தான் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார் மலாலா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x