பாகிஸ்தானில் பயணிகள் ரயில்கள் மோதி விபத்து: 30 பேர் பலி; பலர் காயம்

படம் உதவி: ட்விட்டர்
படம் உதவி: ட்விட்டர்
Updated on
1 min read

பாகிஸ்தானில் பயணிகள் ரயில்கள் இரண்டும் தடம் புரண்டு ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் 30 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) சயித் எக்ஸ்பிரஸ், மிலத் எக்ஸ்பிரஸ் ஆகிய பயணிகள் ரயில்கள் இரண்டும் தடம் புரண்டு ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 30 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் பலர் பலத்த காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்த அதிர்ச்சிகரமான ரயில் விபத்தில் 30 பேர் பலியாகி உள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் உடனே சென்று விரைவாக மீட்புப் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட மோசமான ரயில் தீ விபத்தாக இது கருதப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானில் 2005-ம் ஆண்டு சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in