Published : 05 Jun 2021 09:45 AM
Last Updated : 05 Jun 2021 09:45 AM

ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கம்; மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என ட்ரம்ப் விமர்சனம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். இந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக வாஷிங்டனில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூடியது.
அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மேலும், தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்கள் டொனால்டு ட்ரம்பின் அதிகாரப்பூர்வ கணக்குகளை தற்காலிகமாக முடக்கின.

டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்பற்றி வந்தநிலையில் முடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டொனால்டு டிரம்ப் கூறுகையில் ‘‘2 ஆண்டுகள் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x