

12 முதல் 15 வயதினருக்கு பைஸர் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த பிரிட்டன் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், ஐரோப்பிய யூனியனின் மருத்துவ அமைப்பின் தலைவர் மார்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தடுப்பூசி செலுத்துவதால் 12 -15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே, பைஸர் கரோனா தடுப்பூசியை 12 - 15 வயதினருக்குச் செலுத்த நாங்கள் அனுமதி அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரிட்டன் மருத்துவக் குழு, பதின் பருவத்தினருக்கு பைஸர் கரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டன் தடுப்பூசிக் குழு, இந்தப் பரிந்துரை குறித்து ஆலோசித்து விரைவில் முடிவு வெளியிட இருக்கிறது.
ஜெர்மனியில் 12 வயதுக்கு அதிகமான சிறுவர், சிறுமிகளுக்கு ஜூன் 7ஆம் தேதி பைஸர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கடந்த மாதம் அமெரிக்காவின் மத்திய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, பைஸர் நிறுவனத் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது. அதேபோல் கனடாவும் அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன.