Published : 04 Jun 2021 02:52 PM
Last Updated : 04 Jun 2021 02:52 PM

இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசி: பிரதமரிடம் உறுதியளித்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசி தருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உரையாடினார். அப்போது விரைவில் இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பிவைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

கரோனாவிலிருந்து விடுபட தடுப்பூசித் திட்டத்தை வேகப்படுத்திவருகின்றன உலக நாடுகள்.

இதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற வளர்ந்த நாடுகள் தடுப்பூசியில் தன்னிறைவைப் பெற்றுள்ளன. அவை தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகளை வைத்துள்ளன.

ஆனால், ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிலை அப்படியாக இல்லை. இதனால், வல்லரசான அமெரிக்கா தன்னிடம் உபரியாக உள்ள 8 கோடி தடுப்பூசியை தேவையுள்ள நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து, அமெரிக்காவும் தனது கொள்கைகளை தளர்த்திக் கொண்டு உபரி மருந்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் உத்தியை வகுத்தது.

அதன்படி 25 மில்லியன் தடுப்பூசிகளை இந்தியா, கவுதமாலா, கரீபியன் தீவு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தது. இதனை ஏற்கெனவே அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தற்போது இதற்கான உத்தரவை அதிபர் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர், அமெரிக்க அரசு தன்னிடம் உள்ள தடுப்பூசிகளை பரந்துபட்டு உலக நாடுகள் பலவும் பெற்று பயனடையும் வகையில் பிரித்துக் கொடுப்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார். விரைவில் இந்தியாவுக்கான கரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அமெரிக்க துணை அதிபர் கமலாஹாரிஸ் தன்னுடன் பேசியது குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "உலக நாடுகள் கரோனா தடுப்பூசி வழங்கி வருவதின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் தடுப்பூசி வழங்கும் அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது. இதற்காக நான் பாராட்டுகளை தெரிவித்தேன்.

இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்துக்கு அமெரிக்க அரசு, அமெரிக்க தொழில் நிறுவனங்கள் மட்டும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அளித்துவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தேன்.

கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சிக்கு அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தேன்" எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டுத் தலைவர்களின் உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், சேண்டர்ஸ் கூறுகையில் "துணை அதிபர் கமலா ஹாரிஸ், தடுப்பூசி பகிர்தல் தொடர்பாக பல நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசித்தார். இந்தியப் பிரதமருடனும் பேசினார். கரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு செயல்படுவது குறித்துப் பேசிக்கொண்டனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x