சிரியா போரை நிறுத்த புதிய அமைதி திட்டம்: ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சிரியா போரை நிறுத்த புதிய அமைதி திட்டம்:  ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
Updated on
2 min read

சிரியாவில் உள்நாட்டுப் போரை நிறுத்த ஐ.நா. சபை சார்பில் புதிய அமைதி திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. அங்கு சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்.

அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிர வாதிகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியாவின் 70 சதவீத பகுதிகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது.

அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-நஸ்ரா முன்னணி தீவிரவாதிகளும் அரசுக்கு எதிராக தனியாக போரில் ஈடுபட்டுள்ளனர்.

இவை தவிர மிதவாத எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களும் சிரியாவில் செயல்படுகின்றன. அந்த குழுக் களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. அதிபர் ஆசாத் துக்கு ஆதரவளிக்கும் ரஷ்யா, அங்கு ராணுவ முகாம்களை அமைத்துள்ளது. ஐ.நா. சபை கணக்கீட்டின்படி சிரியாவில் சுமார் 160 கிளர்ச்சிக் குழுக்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில் அந்த நாட்டில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சார்பில் புதிய அமைதி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐ.எஸ்., அல்-நஸ்ரா முன்னணியை தவிர்த்து இதர அரசியல் கட்சிகள், மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றி ணைத்து சண்டை நிறுத்த ஒப்பந் தத்தை அமல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

இதுதொடர்பான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் ரஷ்ய வெளி யுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ஜான் கெர்ரி கூறியபோது, அப்பாவி பொது மக்கள் மீது குண்டுகள் வீசப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதை கருத்திற் கொண்டே புதிய அமைதி திட்டத்தை வரையறுத்துள்ளோம் என்றார்.

செர்ஜி லாரவ் கூறியதாவது: சிரியாவின் தலையெழுத்தை, எதிர்காலத்தை அந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதிபர் ஆசாத் பதவியில் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும் மக்கள்தான் முடிவெடுக்க முடியும். வெளிநாட்டு சக்திகள், தீவிரவாதிகள் முடிவெடுக்க உரிமையில்லை.

ஐ.நா. சபை தீர்மானத்தின் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும். சிரியா அரசின் வேண்டுகோளை ஏற்று சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டே ரஷ்ய விமானப் படை அங்கு முகாமிட்டுள்ளது. இதில் எவ்வித தவறும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உள்நாட்டுப் போரில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றிணைந்து செயல் படுவதால் அரசு தரப்புக்கும் மிதவாத எதிர்க்கட்சி, கிளர்ச்சிக் குழுக்கள் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in