

பிரதமர் மோடியின் திடீர் வருகையை பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் வெகுவாக வரவேற்றுள்ளன. அதேவேளையில், இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பயணித்திலிருந்த தாம் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திக்கப் போவதாக தனது ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, டெல்லி திரும்பும் வழியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லாகூர் சென்றார். | முழு விவரம் ->பாகிஸ்தானுக்கு திடீர் பயணம்: நரேந்திர மோடி - நவாஸ் ஷெரீப் சந்திப்பு
இந்தியாவில் முக்கிய கட்சிகளின் பார்வை:
காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாடு அமைப்பும் மோடியின் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்றுள்ளது. இது ஒரு நல்ல தொடக்கம் என்று அந்த அமைப்பின் தலைவர் சையது அலி ஷா கிலானி கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டதை விமர்சித்துள்ள காங்கிரஸ், பிரதமர் நரேந்திர மோடி தனது சாகச செயல்களை தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் காட்ட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி விமர்ச்சித்துள்ளது.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் அசுதோஷ் கூறியபோது, கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தக்கூடாது என்று மோடி கூறினார், இப்போது அவரே பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறிய போது, மோடியின் பயணம் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மோடியின் பாகிஸ்தான் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மோடியின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் | படம்: ஏ.பி.
பாகிஸ்தானில் வரவேற்பு
ஆனால், மோடியின் வருகையை பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் வெகுவாக வரவேற்றுள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சையத் குர்ஷித் ஷா கூறும்போது, தனது பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மோடியின் பயணத்தை வெகுவாக வரவேற்பதாகக் கூறியுள்ளார். அக்கட்சியின் பிலாவல் பூட்டோ சர்தாரி, "நரேந்திர மோடியை பாகிஸ்தானுக்கு வரவேற்கிறேன். தொடர் பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே அனைத்து நீண்ட கால பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், "மோடியின் பயணம் இந்தியா - பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட உதவும். பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் கமர் ஜமான் கைரா, "மோடியின் பயணம் இருநாட்டுக்கு இடையே ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை நடைபெற உதவும்" என கருத்து தெரிவித்துள்ளதாக ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அவாமி தேசிய கட்சியின் தலைவர் ஜாகித் கான் கூறும்போது, "இந்தியா - பாகிஸ்தான் உறவில் ஓர் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜகாங்கிர், "காஷ்மீரில் மனித உரிமை அத்துமீறலை தடுக்கவும், இருநாடுகளுக்கும் இடையேயான விசா பிரச்சினைக்கு தீர்வு காணவும் இந்தியப் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு நிபுணர் ஏர் வைஸ் மார்ஷெல் (ஓய்வு) ஷாகித் லத்தீப், "இது ஒரு நேர்மறை விளைவை ஏற்படுத்தும் நிகழ்வு. அணுஆயுதங்கள் வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும்" என கருத்து தெரிவித்துள்ளார்.
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர்.
மோடியின் பயணத்தை பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் பலவும் பரவலாக வரவேற்றிருந்தாலும். அந்நாட்டு வலதுசாரி அமைப்புகள் சில எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. ஜமாத் இ இஸ்லாமி கட்சியில் சிராஜுல் ஹக், "மோடியை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது துரதிர்ஷ்டவசமானது" எனக் கூறியுள்ளார்.
ராஜதந்திரத்துக்கு ஒரு சிறந்த உதாரணம்:
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் (இந்தியாவுக்கான துணைத் தூதராகவும் இருந்துள்ளார்) 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) கூறும்போது, "மோடி பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளது ராஜதந்திரத்துக்கு ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. இருநாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர பேச்சுவார்த்தையை இனி புது உத்வேகத்துடன் தொடங்க முடியும்" எனக் கூறியுள்ளார்.