

சவுதி அரேபியாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் அந்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக 20 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் இது மொத்தம் உள்ள சுமார் 2,100 இடங்களில் ஒரு சதவீதம் மட்டுமே ஆகும்.
மன்னராட்சி நடைபெறும் சவுதியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பு நகராட்சி கவுன்சில் மட்டுமே. இந்த கவுன்சில்களுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் சுமார் 7 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் 979 பேர் பெண்கள். இந்தத் தேர்தலில் பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடவும், தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும் முதல்முறையாக அனுமதிக்கப்பட்டது.
தேர்தல் முடிவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி 20 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தலைநகர் ரியாத் நகரில் மட்டும் அதிகபட்சமாக 4 பேர் வெற்றி பெற்றனர்.
இதில் இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா நகராட்சிக்குட்பட்ட மத்ரகத் கவுன்சிலுக்கான தேர்தலில் சல்மா பின்ட் ஹிஸாப் அல்-ஒடீபி முதலில் வெற்றி பெற்ற பெண் என்ற பெயர் பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 7 ஆண்கள் மற்றும் 2 பெண்களை தோற்கடித்துள்ளார்.
சவுதியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக பயணம் செய்யவும், பணிக்கு செல்லவும், திருமணம் செய்துகொள்ளவும் தங்களது குடும்ப ஆண் உறுப்பினர்களின் அனுமதியைப் பெற வேண்டும். கார் ஓட்ட அனுமதி இல்லை. மேலும் உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத ஒரே நாடாக சவுதி விளங்கியது. இந்நிலையில்தான் பெண்களுக்கு இந்த ஆண்டு முதல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்ந்தபாடில்லை.