அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் நிதியமைச்சர் பலி

அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் நிதியமைச்சர் பலி
Updated on
1 min read

அமெரிக்க கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் நிதியமைச்சர் அபு சலாவும் அவரது கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியா, இராக்கில் பெரும்பகுதியை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பகுதியை இஸ்லாமிய தேசம் என்று அறிவித்துள்ள ஐ.எஸ். அமைப்பு தனி அரசை நடத்தி வருகிறது.

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி, இஸ்லாமிய தேசத்தின் தலைவராகவும் மதத் தலைவராகவும் விளங்குகிறார். அவரது தலைமையில் பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நிதித்துறை அமைச்சர் அபு சலா (42) செயல்பட்டு வந்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சிரியா, இராக்கில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை அமெரிக்க கூட்டுப் படை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பர் இறுதியில் இராக்கின் தால் அபார் பகுதியில் அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல் நடத்தியது. இதில் ஐ.எஸ். நிதியமைச்சர் அபு சலா அவரது உதவியாளர்கள் அபி மரியம், அபு ரஹ்மான் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் ஐ.எஸ். அமைப்புக்கு நிதி ஆதாரங்களை சேகரிப்பதில் முக்கியமானவர்கள் ஆவர்.

116 டேங்கர் லாரிகள் அழிப்பு

ஐ.எஸ். அமைப்பு தனது கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய் சர்வதேச கள்ள சந்தையில் விற்பனை செய்கிறது. அண்மையில் அங்குள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து 116 லாரிகளில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனங்கள் மீது அமெரிக்க கூட்டுப் படை வான்வழி தாக்குதல் நடத்தி முழுமையாக அழித்தது.

ஐ.எஸ். அமைப்பின் ஒட்டுமொத்த வருவாயில் 40 சதவீதம் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் திரட்டப்படுகிறது. இதற்காக ஐ.எஸ். அமைப்பிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் உள்ளன. அந்த லாரிகளையும் எண்ணெய் கிணறுகளையும் அழிக்க அமெரிக்க கூட்டுப்படை திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in