

சீனாவில் மக்கள்தொகை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக சீனா விளங்குகிறது. அதிகமான மக்கள்தொகையால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், சீனாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக மக்கள்தொகை பெருக்க விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. உதாரணத்துக்கு 2016-ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்த குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை 2018-ம் ஆண்டு 1.2 கோடியாகக் குறைந்துள்ளது.
குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதால் வயது சார்ந்தோரின் பிரச்சினைகள் அடுத்த சில ஆண்டுகளில் சீனாவில் பெரிய அளவில் எழக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்தனர். குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் நடுத்தர வயது கொண்ட பெண்களின் எண்ணிக்கை 3.9 கோடி என்ற அளவில் குறையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் நடத்தினார். இதன் முடிவில் தற்போது ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி அளித்துள்ளது. இச்செய்தியை சீன ஊடகமான சினுவா உறுதி செய்துள்ளது.