Last Updated : 30 May, 2021 11:46 AM

 

Published : 30 May 2021 11:46 AM
Last Updated : 30 May 2021 11:46 AM

மெகுல் சோக்ஸியை அழைத்துவர தனி விமானம்; எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்: டோமினிக்கா அரசிடம் மத்திய அரசு கோரி்க்கை

டோமினிக்கா நாட்டுச் சிறையில் இருக்கும் தொழிலதிபர் மெகுல் சோக்ஸி | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பித்த தொழிலதிபர் மெகுல் சோக்ஸி தற்போது டோமினிக்கா அரசின் வசம் உள்ளார். அவரை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெகுல் சோக்ஸியை அழைத்துவரத் தேவையான ஆவணங்களுடன் இந்தியாவிலிருந்து தனி விமானம் டோமினிக்காவுக்கு வந்துள்ளதாக ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

ஆனால், மெகுல் சோக்ஸி இந்தியாவுக்கு அனுப்பப்படுவாரா அல்லது தற்போது அவர் குடிமகனாக இருக்கும் ஆன்டிகுவா பர்படாஸுக்கு அனுப்பப்படுவாரா என்பது ஜூன் 2-ம் தேதி நீதிமன்ற விசாரணையில்தான் தெரியவரும். இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படுவதிலிருந்து தப்பிக்க மெகுல் சோக்ஸி ஏராளமான வழக்கறிஞர்களையும், உள்ளூர் அரசியல்வாதிகளையும் பயன்படுத்தி தனது செல்வாக்கை வெளிப்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஆன்டிகுவா பர்படாஸிலிருந்து தப்பித்து சட்டவிரோதமாக டோமினிக்காவுக்குள் சென்ற மெகுல் சோக்ஸியை நாங்கள் மீண்டும் ஏற்கமாட்டோம் என்று பர்படாஸ் பிரதமர் கேஸ்டன் பிரவுன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பி அங்கு வாழ்ந்து வருகிறார்

இந்நிலையில் கடந்த 23்ஆம் தேதி ஜாலி ஹார்பருக்குச் சென்ற மெகுல் சோக்ஸியைக் காணவில்லை. இதையடுத்து ஆன்டிகுவா பர்படாஸ் போலீஸார் இன்டர்போல் போலீஸார் மூலம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்நிலையில் ஆன்டிகுவா பர்படாஸ் தீவிலிருந்து தப்பித்த மெகுல் சோக்ஸி, டோமினிக்கா நாட்டின் வடபகுதியான தலைநகர் ரோஸியில் உள்ள கேன்பீல்ட் கடற்கரையில் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது டோமினிக்கா நாட்டு போலீஸாரின் பாதுகாப்பில் இருக்கும் மெகுல் சோக்ஸியை ஏற்கமாட்டோம் என ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் பிரவுன் அறிவித்துள்ளார். அதேசமயம் மெகுல் சோக்ஸியை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று டோமினிக்கா நாட்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், மெகுல் சோக்ஸியின் இந்திய வழக்கறிஞர் விஜய் அகர்வால் மூலம் டோமினிக்கா வழக்கறிஞர் வேன் மார்ஷ், மெகுல் சோக்ஸி குறித்து ஆட்கொணர்வு மனுவை டோமினிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, டோமினிக்காவிலிருந்து மெகுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த மனு ஜூன் 2-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுன்

இதற்கிடையே பர்படாஸ் பிரதமர் கேஸ்டன் பிரவுன் வானொலிக்கு அளித்த பேட்டியில், “மெகுல் சோக்ஸியை அழைத்துச் செல்ல இந்தியாவிலிருந்து தனி விமானம், தகுந்த ஆதாரங்களுடன் டோமினிக்காவின் டக்ளஸ் சார்லஸ் விமான நிலையத்துக்கு வந்துவிட்டது.

கத்தார் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான ஏ7சிஇஇ வகை விமானம் டெல்லியிலிருந்து மே 28-ம் தேதி புறப்பட்டு மாட்ரிட் வழியாக டோமினிக்காவுக்கு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.16 மணிக்கு வந்துள்ளது. ஜூன் 2-ம் தேதி டோமினிக்கா உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எடுக்கும் முடிவை மதிக்கிறோம். ஆனால், நாங்கள் விடுக்கும் கோரிக்கை என்பது, மெகுல் சோக்ஸியை ஆன்டிகுவாவிடம் ஒப்படைக்காமல் நேரடியாக இந்திய அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அதுதான் ஏற்புடையதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மத்திய அரசு வட்டாரங்கள் டோமினிக்கா அரசிடம் விடுத்துள்ள கோரிக்கையில், “மெகுல் சோக்ஸி உண்மையில் இந்தியக் குடிமகன், ஆன்டிகுவா பர்படாஸில் புதிதாகக் குடியுரிமை பெற்று இந்தியாவிலிருந்து தப்பிவிட்டார். இந்தியாவில் 2 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு மோசடி செய்து மெகுல் சோக்ஸி தப்பியுள்ளார். அவரைக் கைது செய்யக் கோரி இந்திய அரசு இன்டர்போல் மூலம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மெகுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைத்தால்தான் அவர் செய்த குற்றத்துக்கு சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளமுடியும். ஆன்டிகு பர்படாஸ் அரசு கூட சோக்ஸியை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைத்துவிடுங்கள் எனத் தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x