50% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம்: ஜோ பைடன் பெருமிதம்
அமெரிக்காவில் இதுவரை 50% மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ அமெரிக்காவில் இதுவரை 50% மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலையின்மை கோரிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
கரோனா தடுப்பூசிகளை விரைவாகச் செலுத்தி வரும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இதன் காரணமாக அமெரிக்காவில் கரோனா தொற்று பெருமளவு குறைந்துவிட்டது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,393 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 630 பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தியவர்கள் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அமெரிக்கா சில நாட்களுக்கு முன்னர்தான் அறிவித்தது.
கரோனா தடுப்பூசியை சதவீதத்தின் அடிப்படையில் அதிக அளவில் செலுத்திய நாடுகளில், இஸ்ரேல் முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாம் இடத்திலும், மங்கோலியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. கனடா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்
