

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு ஆன்டிகுவா பர்படாஸில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, டோமினிக்கா நாட்டுக்கு தப்பும் போதுபிடிபட்டார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த முயற்சிகள் நடந்த நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
மெகுல் சோக்ஸியின் டோமினிக்கா வழக்கறிஞர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ததால் அவரை நாடு கடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து 2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பி அங்கு வாழ்ந்து வருகிறார்
இந்நிலையில் கடந்த 23்ம்தேதி ஜாலி ஹார்பருக்கு சென்ற மெகுல் சோக்ஸியை காணவில்லை. இதையடுத்து கடந்த 4 நாட்களாக ஆன்டிகுவா பர்படாஸ் போலீஸார் இன்டர்போல் போலீஸார் மூலம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்தனர்.
இந்நிலையில் ஆன்டிகுவா பர்படாஸ் தீவிலிருந்து தப்பித்த மெகுல் சோக்ஸி, டோமினிக்கா நாட்டின் வடபகுதியான தலைநகர் ரோஸியில் உள்ள கேன்பீல்ட் கடற்கரையில் நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்டு அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது டோமினிக்கா நாட்டு போலீஸாரின் பாதுகாப்பில் இருக்கும் மெகுல் சோக்ஸியை ஏற்கமாட்டோம் என ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் பிரவுன் அறிவித்துள்ளார். அதேசமயம் மெகுல் சோக்ஸியை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று டோமினிக்கா நாட்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், மெகுல் சோக்ஸியின் இந்திய வழக்கறிஞர் விஜய் அகர்வால் மூலம் டோமினிக்கா வழக்கறிஞர் வேன் மார்ஷ் மெகுல் சோக்ஸி குறித்து ஆட்கொணர்வு மனுவை டோமினிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, டோமினிக்காவிலிருந்து மெகுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே டோமினிக்கா வழக்கறிஞர் வேன் மார்ஷ் அளித்த பேட்டியில் கூறுகையில் “ டோமினிக்கா போலீஸாரால் மெகுல் சோக்ஸி கைது செய்யப்பட்டபின் அவருக்கு சட்ட உதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, இந்திய வழக்கறிஞர் அகர்வால் கேட்டுக்கொண்டதன்படி, டோமினிக்கா நீதிமன்றத்தில் மெகுல் சோக்ஸியை ஆஜர்படுத்த ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்துள்ளோம்.
ஆன்டிகுவாவில் உள்ள ஜாலி ஹார்பரில் இருந்து மெகுல் சோக்ஸி கடத்தப்பட்டுள்ளார். அவரை சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சோக்ஸியின் கண்கள் வீங்கியுள்ளன, உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சோக்ஸி தற்போது ஆன்டிகுவா பர்படாஸ் நாட்டு குடிமகன் இந்தியக் குடிமகன் அல்ல. ஆதலால் இந்தியாவுக்கு அவரை அனுப்பி வைக்க முடியாது, பர்படாஸுக்குத்தான் அனுப்ப முடியும்” எனத் தெரிவித்தார்.
மெகுல் சோக்ஸி வழக்கறிஞர் விஜய் அகர்வால் அளித்த பேட்டியில் “ ஆன்டிகுவா பர்படாஸ், டோமினிக்காவில் உள்ள சோக்ஸின் வழக்கறிஞர்கள் சட்டரீதியாக அவரிடம் பேச முயன்றுள்ளனர் ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2 நிமிடங்கள் சோக்ஸியிடம் வழக்கறிஞர்கள் பேசியதிலிருந்து ஆன்டிகுவாவில் இருந்து தாமாக சோக்ஸி செல்லவில்லை என்பது மட்டும் தெரிகிறது.
ஆன்டிகுவாவில் இருந்து சோக்ஸி கடத்தப்பட்டு வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டு அதன்பின் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதன்பின் இவர் படகில் சென்றபின்புதான் அவர் தப்பியதாக தகவல் வெளியானது. சோக்ஸியின் உடலில் காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.