

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் முக்கிய பங்காற்றியுள்ளது.
கடந்த 2008 மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விரிசல் அதிகமானது. அண்மைகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சுமுக உறவு துளிர்விட்டுள்ளது.
பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு மாநாட்டில் மோடியும் நவாஸும் சந்தித்துப் பேசினர். டிசம்பர் 6-ல் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பாங்காக்கில் ஆலோசனை நடத்தினர். கடந்த 9-ம் தேதி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் மாநாட்டில் பங்கேற்றார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 25-ம் தேதி திடீர் பயணமாக பாகிஸ்தான் சென்று அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு உறவில் புதிய திருப்பம் ஏற்படுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் பின்னணியில் இருப்பதாக அந்த நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வு பெற்ற ராணுவ மூத்த தளபதி நசீர் கான் ஜன்ஜுவா அண்மையில் நியமிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீபுக்கு மிகவும் நெருக்கமானவர்.
நசீர் கானின் முயற்சியால் இந்திய, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ராணுவம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. அதைத் தொடர்ந்தே இருநாட்டு உறவில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டன என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதேபோல காஷ்மீர் விவகாரம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்று பாகிஸ்தான் வாதிட்டு வருகிறது.
இந்த விவகாரங்களில் இருதரப்பினரும் சிறிது விட்டுக் கொடுத்திருப்பதால் அமைதிப் பேச்சு மீண்டும் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோடியின் பரிசு
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை கடந்த 25-ம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தபோது கைவேலைப்பாடுகள் நிறைந்த தலைப்பாகையை பரிசாக அளித்தார். அன்றைய தினம் நவாஸின் பேத்தி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மோடி அளித்த தலைப்பாகையை அணிந்து நவாஸ் காட்சியளித்தார்.