இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைகிறது; ஒருவாரத்தில் 23% சரிவு: உலக சுகாதார அமைப்பு தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோரை கடந்த ஒரு வாரத்தில் 23 சதவீதம் இந்தியா குறைத்துள்ளது. இருப்பினும் உலகளவில் அதிகளவு பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு மே 25ம் தேதி முடிந்த வாராந்திர உலகளாவிய தொற்று நோய் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் கரோனவில் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை சரி்ந்துள்ளது. உலகளவில் புதிதாக 41 லட்சம்பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர், 84 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தொற்றில் 14 சதவீதமும், உயிரிழப்பில் 2 சதவீதமும் முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பி.1.617 வகை வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன.

பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பி.1.617 வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த வகை வரைஸ் அதிகமாகப் பரவும் சக்தி கொண்டதாகவும், நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும், மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது போன்றவை குறித்து தீவிர ஆய்வில் இருந்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ்

கடந்த 7 நாட்களில் இந்தியாவில் 18 லட்சத்து46 ஆயிரத்து 55 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர் இது 23 சதவீதம் குறைவாகும். பிரேசிலில் 4.51 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர் இது 3 சதவீதம் குறைவாகும்.

அர்ஜென்டினாவில் 2.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் இது 41 சதவீதம் அதிகம், அமெரி்க்காவில் 1.88 லட்சம் பாதிக்கப்பட்டனர் 20 சதவீதம் குறைவாகும், கொலம்பியாவில் 1.07 லட்சம் தொற்று ஏற்பட்டது.

உலகளவில் கடந்த 4 வாரங்களாக கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது, ஆனால், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, பல நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்தவாரத்தில் 28,292 பேர் உயிரிழந்தனர். 10 லட்சம் பேருக்கு 2.1 பேர் உயிரிழந்தனர். இது 4 சதவீதம் அதிகமாகும். நேபாளில் 1,297 பேர் உயிரிழந்தனர், 4.5 சதவீதம் அதிகம், இந்தோனேசியாவில் 1,238 பேர் உயிரிழந்தனர், 10 சதவீதம் அதிகமாகும்

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in