

நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு 5 கோடி டோஸ் கரோனா தடுப்பூசியை வழங்க முடியும் என அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு கரோனா தடுப்புமருந்துகள் இந்தியாவில் கடந்தஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 20 கோடி பேருக்கு இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி' தடுப்புமருந்தும், பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் ஒரே கரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக் வி' ஆகும்.
இந்நிலையில், அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தை வாங்கும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது. மருந்தின் விலை, மருந்தை இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அம்மருந்து நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவுக்கு நடப்பாண்டு இறுதிக்குள் 5 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை தங்களால் வழங்க முடியும் என பைசர்நிறுவனம் நேற்று அறிவித்தது. அதாவது வரும் ஜூலை, ஆகஸ்ட்மாதங்களில் தலா 1 கோடி மருந்துகளையும், செப்டம்பரில் 2 கோடி மருந்துகளையும், அக்டோபரில் 1 கோடி மருந்துகளையும் வழங்கசாத்தியம் இருப்பதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிபந்தனை
அதே சமயத்தில், சில நிபந்தனைகளையும் பைசர் நிறுவனம் விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்தியாவில் தடுப்பு மருந்தை சோதனைக்கு உட்படுத்தும் விஷயத்தில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும்; தடுப்பு மருந்தை பயன்படுத்தும் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், தங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை பைசர் நிறுவனம் விதித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பைசர் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்யும் முயற்சியில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் ஈடுபட்டன. ஆனால், மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்க மறுப்பு தெரிவித்த பைசர் நிறுவனம், இந்திய அரசு மட்டுமே தங்களிடம் நேரடிக் கொள்முதலை மேற்கொள்ள முடியும் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.