

கரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக் கொண்டவர்கள் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரிய அரசுத் தரப்பில், “கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை போட்டுக் கொண்டால் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம். செப்டம்பர் மாதத்துக்குள்ளாக 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திவிடத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,940 பேர் பலியாகியுள்ளனர்.
முன்னதாக, கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைச் செலுத்திக் கொண்டவர்கள் பொதுவெளியில் வரும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் அறிவித்தன. தற்போது தென்கொரியாவும் அறிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.