Last Updated : 26 May, 2021 12:55 PM

 

Published : 26 May 2021 12:55 PM
Last Updated : 26 May 2021 12:55 PM

12 முதல் 17 வயதுப் பிரிவினர்: 100% கரோனா வராமல் தடுக்கும் மாடர்னா தடுப்பூசி

படம் உதவி: ட்விட்டர்.

வாஷிங்டன்

12 வயது முதல் 17 வயதுள்ள பிரிவினருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கிறது என்பது பல்வேறு ஆய்களில் தெரியவந்துள்ளது என்று அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபானே பான்செல் வெளியிட்ட அறிவிப்பு குறித்து 'தி ஹில்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:

''எங்களின் எம்ஆர்என்ஏ-1273 தடுப்பூசி 12 வயது முதல் 17 வயதுள்ள பதின்வயதுப் பிரிவினருக்குச் சிறப்பாகச் செயல்படுகிறது. குறிப்பாக கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 100 சதவீதம் முழுமையாகப் பாதுகாக்கிறது எனப் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

எங்களின் ஆய்வு முடிவுகளை அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் ஜூன் முதல் வாரத்தில் வழங்கி அனுமதி பெறுவோம். கரோனா வைரஸை ஒழிப்பதற்கான பணியில் எங்களின் பணியைத் தொடர்ந்து செய்வோம்.

12 வயது முதல் 17 வயதுள்ள 3,732 பேருக்கு எங்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது. இதில் இதுவரை எந்த நபருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. உடல்ரீதியான பாதிப்பும், பாதுகாப்புக் குறைபாடும் இல்லை.

முதல் டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின் 93 சதவீதம் பாதுகாப்பும், 2-வது டோஸ் செலுத்திக்கொண்டபின் 100 சதவீதம் முழுமையான பாதுகாப்பும் மாடர்னா தடுப்பூசி வழங்குகிறது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் வெள்ளியன்றுதான், மாடர்னா தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ள உலக நாடுகளுக்கு அனுமதி அளித்தது. விரைவில் பதின்வயதுப் பிரிவினருக்கும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு மாடர்னா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கலாம்.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்காவின் மத்திய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பைஸர் நிறுவனம் தனது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x