தமிழர்களுக்கு எதிரானதல்ல இலங்கைப் போர்: ராஜபக்சே

தமிழர்களுக்கு எதிரானதல்ல இலங்கைப் போர்: ராஜபக்சே

Published on

இலங்கையில் நடந்த போர் தமிழர்களுக்கு எதிரானதல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரானது என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர் நகோவைச் சந்தித்த அதிபர் ராஜபக்சே போருக்குப் பிறகான இலங்கையின் வளர்ச்சி பற்றி விளக்கினார்.

போர் தமிழ்ச் சமூகத்திற்கு எதிரானதல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரானது என்று அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் போரின் போது தங்கள் இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்களுக்கு உடனடியாக மறுகுடியேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் போருக்குப் பிறகு எத்தகைய வளர்ச்சியை தங்கள் அரசு ஏற்படுத்தியுள்ளது என்பதை அவர் வங்கித் தலைவருக்கு விளக்கினார். அப்போது “நீங்களே நேரில் சென்று அப்பகுதிகளின் வளர்ச்சி நிலை குறித்துக் காணலாம்” என்று கூறினார்.

எரிசக்தி, சாலைகள் மேம்பாடு, நீர் வினியோகம், சுகாதாரம், கல்வி, திறன் வளர்ப்பு, போருக்குப் பிந்தைய மறுகட்டுமானப் பணிகள், மற்றும் நீராதார நிர்வாகம் ஆகிய துறைகளில் ஆசிய வளர்ச்சி வங்கி இலங்கைக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

இலங்கை 100 சதவீத கல்வியறிவு என்பதற்கு மிக அருகில் இருப்பதாகவும், வறுமை ஒழிப்பிலும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இலங்கை சிறப்பாக இருப்பதாகவும் ஆசிய வளர்ச்சி வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in