

சீனாவின் வடகிழக்கு, தென்மத்தியப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தலி நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது.
மேலும், தென்மத்தியப் பகுதியில் உள்ள குங்கைய் மாகாணத்திலிருந்து 1,000 கிலோ மீட்டர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 3 பேர் பலியானதாகவும், 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிவிப்பை சீனா அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
சீனாவில் கடந்த வருடம் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். சீனாவின் மிக மோசமான நிலநடுக்கம் இதே யுன்னான் மாகாணத்தில் 2008ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதில் 90,000 பேர் வரை பலியாகினர்.