

ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டில் நேற்று வரைவு ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. இதில் புவி வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபை சார்பில் பருவநிலை மாறுபாடு குறித்த மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறுகிறது. முதல்நாள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 13 நாட் களாக பல்வேறு நாடுகளின் சுற்றுச் சூழல் துறை அமைச்சர்கள் பருவநிலை மாறுபாடு பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். அவர்கள் கூறிய ஆலோசனைகளின் அடிப்படையில் இறுதி வரைவு ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டுள் ளது.
அந்த வரைவு ஒப்பந்தத்தை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரன்ட் பேபியஸ் பாரீஸ் மாநாட்டில் நேற்று வெளியிட்டார். அதில், புவி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 1.5 டிகிரி செல்சியஸ் வரையாவது வெப்ப நிலையை குறைக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வரும் 2020-ம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்காக ஆண்டு தோறும் ரூ.6,70,000 கோடி நிதியுதவி வழங்கவும் வரைவு ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் 196 நாடுகள்
இந்த வரைவு ஒப்பந்தம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 196 நாடுகளின் அமைச்சர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர்.
‘வரைவு ஒப்பந்தம் ஏற்கப்பட்டால் உலக வரலாற்றில் மிகப் பெரிய திருப்பு முனையாக இருக்கும், இல்லை யெனில் வரலாற்று தோல்வியாக அமையும்’ என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரன்ட் பேபியஸ் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பேசிய போது, பூமியைக் காப்பது நமது அனை வரின் கடமை. அதற்காக நீண்ட விவா தத்துக்குப் பிறகு வரைவு ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.