Published : 21 May 2021 03:10 AM
Last Updated : 21 May 2021 03:10 AM

உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

அன்டார்டிக்கா கண்டத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பூமியின் தென்கோடியில் அமைந்துள்ள அன்டார்டிக்கா கண்டத்தில் லட்சக்கணக்கான பனிப்பாறைகள் சூழ்ந்துள்ளன. புவி வெப்பமயமாதலை இந்தப்பனிப்பாறைகளே சமன் செய்து வருகின்றன. இதனிடையே, மக்களின் வாழ்வியல் மாற்றங்கள், அதிகரிக்கும் தொழிற்சாலைகள், கரியமில வாயு வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வருடங்களாக அன்டார்டிக்காவில் உள்ளபனிப்பாறைகள் உடைந்து வருகின்றன. இது பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பனிப்பாறைகள் உடைவதால் கடல்நீர் மட்டம் பல மடங்கு அதிகரித்து, கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அன்டார்டிக்காவில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்தது. வேடேல் கடலில் அமைந்திருந்த இந்தப் பனிப்பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அதாவது டெல்லியை (1,484சதுர கி.மீ.) விட 3 மடங்கு பெரிய பனிப்பாறை இதுவாகும். புவி வெப்பமயமாதலே இந்தப் பனிப்பாறை உடைந்ததற்கு முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, அன்டார்டிக்காவின் வடக்கே இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் உடைந்து நொறுங்கியது. இது பிரான்ஸின் பாரீஸ் நகரை விட ஒன்றரை மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸை எட்டினால் அன்டார்டிக்காவில் உள்ள மூன்றில் ஒரு பகுதிபனிப்பாறைகள் உடைந்துவிடும் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பூமியின் வெப்பநிலை 1.02 டிகிரி செல்சியஸ் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x