

ஒரே நாளில் சுமார் 1.4 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார மையம் தரப்பில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1.4 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 40 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹிபி, அன்ஹு போன்ற பகுதிகளில் கரோனா தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் சினோபார்ம், சினோவாக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. சீனத் தடுப்பூசிகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது.
தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.