

பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாத்மா காந்தியின் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் வங்கத்து வாள் ஆகியவற்றை பரிசாக வழங்கி உள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின்.
பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அப்போது அவருக்கு அந்நாட்டு அதிபர் புதின் தனது கிரெம்ளின் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார். பின்னர் இரவு விருந்து அளித்தார். அப்போது இரு தலைவர்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.
இதுகுறித்து மோடி ட்விட்டரில், “மகாத்மா காந்தியின் டைரியில் உள்ள ஒரு பக்கத்தை எனக்கு புதின் பரிசளித்தார். அதில் காந்தியின் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் உள்ளன. மேலும் வங்கத்தைச் சேர்ந்த 18-ம் நூற்றாண்டின் வாளையும் எனக்கு அவர் பரிசளித்தார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொண்டேன்” என பதிவிட்டுள்ளார்.
நெருக்கடி மையத்தில் மோடி
இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட்டரில் கூறும்போது, “ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அந்நாட்டு தேசிய நெருக்கடி நிர்வாக மையத்துக்கு (என்சிஎம்சி) சென்றார். அப்போது இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நெருக்கடி கால பிரச்சினைக்கு தீர்வு காணும் இந்த மையத்தில் 2.4 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக 62 ஆயிரம் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன” என்றார்.
தேசியகீதத்தை கவனிக்காத மோடி
மாஸ்கோ சென்றடைந்த மோடிக்கு நுகோவா-2 விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அப்போது பின்னணியில் ரஷ்ய ராணுவ இசைக்குழுவினரால் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதை உணராத மோடி அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட இடத்திலிருந்து நடக்கத் தொடங்கினார். அப்போது அவரை ரஷ்ய அதிகாரி ஒருவர் நேர்த்தியாக பிடித்து பின்பக்கமாக இழுத்தார். இது மோடிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
மரபுப்படி தேசிய கீதம் இசைக்கும்போது, நிலையாக ஓரிடத்தில் நிற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.