Published : 16 May 2021 03:14 AM
Last Updated : 16 May 2021 03:14 AM

‘எப்படி இருக்க...’ ஆய்வுத் திட்டத்தின் கீழ் சீனாவின் ‘தியான்வென்-1’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி சாதனை

சீனாவின் தியான்வென்-1 விண்கலத்தின் லேண்டர் செவ்வாய் கிரகத்தில் நேற்று காலை தரையிறங்கி சாதனை படைத்தது.

விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா உட்படபல நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ‘சிவப்பு கிரகம்’ என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலங்கள் அனுப்பும் முயற்சியில் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்தியாவும் ‘மங்கல்யான்’ விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்குஅனுப்பியது. அந்த கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் இந்திய விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் முதல் முயற்சியிலேயே குறைந்த செலவில் செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்திய நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ‘தியான்வென்-1’ என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா விண்ணில் ஏவியது. இந்தத் திட்டத்துக்கு ‘எப்படி இருக்க...’ (சீன மொழியில் ‘நி ஹவோ மா’) என்று சீனா பெயர் சூட்டியுள்ளது. சீன விண்கலம் திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையை அடைந்தது.

அதன்பின், விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவியை செவ்வாயில் தரையிறக்கும் பணி தொடங்கியது. லேண்டரை தரையிறக்கும் போது, கடைசி 7 நிமிடங்கள் மிகவும் மோசமானது என்று பல நாட்டு விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். அந்த அபாய கட்டத்தைஎட்டிவிட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி சீனாவின் லேண்டர் கருவி நேற்றுஅதிகாலை செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. ‘பாராசூட்’ மூலம் செவ்வாயின் வடக்கு பகுதியில் லேண்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என்று சீன அரசு தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின், லேண்டரில் இருந்து ‘ஸுராங்’ என்ற ரோவர் ஊர்தி செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. ‘ஸுராங்’ என்பது சீன மக்கள் வழிபடும் அக்னி கடவுளின் பெயர்.

ஆறு சக்கரங்களுடன் 240 கிலோ எடை கொண்ட ‘ஸுராங்’என்ற ரோவர் ஊர்தி செவ்வாய் கிரகத்தில் 3 மாதங்கள் இருந்துபுகைப்படங்கள், நில அமைப்புபோன்ற தகவல்கள், புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும்என்று கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் லேண்டரை தரையிறக்கியதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தியது, லேண்டரை பத்திரமாக தரையிறக்கியது, ரோவர் ஊர்தியை ஆய்வுக்கு செவ்வாய் கிரகத்தில் செயல்பட வைத்து ஆகிய சாதனைகளை சீனா படைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x