

அமெரிக்க பள்ளியில் சிறுமியின் பையில் வெடிகுண்டு உள்ளதா என்று ஆசிரியை கேள்வியெழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்துச் சம்பவத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கோரினார்.
அமெரிக்க மாகாணமான ஜியார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் செயல்படுகிறது ஷில்லோ என்ற பள்ளி. இங்கு படித்து வந்த 13 வயது சிறுமியிடன் தோல்பையில் வெடிகுண்டு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு ஆசிரியை சோதனை நடத்தியதாக அந்தச் சிறுமி வீட்டில் கூறினார். இதனால் பள்ளியில் கேலிக்கு உள்ளானதாகவும் வேதனையை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை அப்திர்ஸாக் ஆடன், பள்ளியில் தனது குழந்தை நடத்தப்பட்ட விதம் வேதனை அளிப்பதாக பள்ளி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "நான் சாதாரண வாகன ஓட்டுநர். நாங்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர். அமெரிக்காவில் வாழ்கிறோமே தவிர, நான் என் பிள்ளைக்கு யாரையும் வெறுக்க கற்றுக் கொடுக்கவில்லை.
எனது மகள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். எனவே அவளை நான் பள்ளியிலிருந்து விடுவித்துக் கொண்டு வேறு பள்ளியி சேர்க்க விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பள்ளிச் சிறுமியிடம் ஆசிரியை வெடிகுண்டு சோதனை நடத்த முயற்சித்ததை அமெரிக்க - முஸ்லிம் கவுன்சில் கண்டித்ததை அடுத்து பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் ஆசிரியை எந்த முன்நோக்கத்துடனும் இவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் தொடர்ந்து நடக்கும் இது போன்றச் சம்பவங்கள், அங்கு மக்களிடையே நிலவும் இஸ்லாமோஃபோபியாவையே (முஸ்லிம் மதத்தின் மீதான அச்சம்) காட்டுவதாக அமெரிக்க - முஸ்லிம் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.