

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை உலுக்கியது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கி இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில் 89 பேரும், ஆப்கானிஸ்தானில் 12 பேரும் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.44 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 203 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் வீடுகளில் உறங்கிக் கொண்டி ருந்தவர்கள் அலறியடித்தபடி வீதிக்கு ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என்றபோதிலும் வீட்டு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் 89 பேரும், அதன் அருகில் உள்ள ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹரில் 12 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஜம்மு-காஷ்மீர், டெல்லி ஆகிய இந்தியாவின் வடமாநிலங்களிலும் உணரப்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் கொட்டும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் விடிய, விடிய வீதிகளிலேயே தங்கினர்.
இது குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, ‘‘நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை உடனடியாக தெரிவிக்க முடியாது. முழு தகவல்கள் கிடைத்த பிறகே, உண்மை நிலவரம் தெரியவரும்’’ என்றார்.
நிலநடுக்கம் குறித்து ஜம்முவை சேர்ந்த சுர்ஜித் கவுர் என்பவர் கூறும்போது, ‘‘நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்து வீடுகளை விட்டு வெட்டவெளிக்கு ஓடி வந்தோம்’’ என்றார். பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களிலும் செய்திகள் பரவியதால் மக்கள் மிகுந்த பீதியடைந்தனர். உறவினர்களிடம் நலம் விசாரிக்க ஒரே நேரத்தில் ஏராளமானோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதால் ஜம்முவில் தகவல் தொடர்பு சேவை ஸ்தம்பித்தது.